உள்ளம் முகத்தில் வாய்மொழியில்
உருவம் காட்டிப் பாய்ந்துவரும்
துள்ளும் அதனை முன்நிற்பார்
துய்க்க இயலும் கணநேரம்.
பேச்சின் உருவம் எழுத்துமொழி
பேணிக் கற்பார் அறிந்திடலாம்.
மூச்சாய் முன்னோர் பின்னோர்க்கு
மொழியும் பதிவே அவ்வெழுத்தாம்.
ஒலியின் எழுத்தோ ஓவியமோ
ஒத்துப் பலரும் பரிமாறில்
அலையும் நெஞ்சை அடுத்தவர்பால்
அள்ளி விதைத்து வளர்த்திடலாம்.
மொழிக்குப் படைத்த எழுத்துருவம்
முன்னோர் வழியில் நடைபயிலும்
அழிக்க வேண்டா! அறிவியலால்
அதுவே மாறும் அரவணைப்போம்.
சின்னக் குழந்தை தாய்அணைக்கும்
செழிக்கும் பருவம் காதலுக்காம்
பின்னர் முதுமை வான்பார்க்கும்
பெற்ற தாயை விலக்குவதோ?
சங்க நூல்கள் நமக்குத்தாய்
தள்ளி வைத்தல் சால்பாமோ?
தங்கை! தம்பி! நாம்ஒன்றாய்த் தாங்கிப்
பேணிப் போற்றிடுவோம்.
பொதுவன் அடிகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக