ஞாயிறு, 25 ஜனவரி, 2009

காவடி (திருக்குறளில்)


காவடி = கா அடி (காப்பாற்றிய, காப்பாற்றுகின்ற, காப்பாற்றும் திருவடி)

காவடித் தண்டின் இரண்டு முனைகளிலும் பாரம். தோள் இருமுனைப் பாரங்களையும் சமமாக்கிக் கொண்டு சுமக்கும்.

காமம் (=காதல் உணர்வு) இணையும் இருபாலாரிடையேயும் சமமாக இருத்தல் வேண்டும். அப்போதுதான் உறவுச் சேர்க்கை இனிக்கும். ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் காதல் உணர்வு காவடித் தண்டின் இருமுனைச் சுமை போலச் சீராக்கப்பட வேண்டும். ஒருவரிடம் அதிகமாகவும், மற்றொருவரிடம் மாறுபட்டும் இருந்தால் காமம் துன்பத்தையே தரும். ஒருதலையான் இன்னாது காமம் காப் போல
இருதலையும் ஏமாப்(பு) உடைத்து.
(திருக்குறள் 1196)

அவள் சொல்கிறாள். என் உயிர் ஒரு காவடி. அந்தக் காவடியில் உள்ள ஒரு பக்கப் பாரம் காமம். இன்னொரு பக்கப் பாரம் அதனை அடையவிடாமல் தடுக்கும் நாணம். இந்த இரண்டையும் சீர் செய்துகொண்டு சுமக்க என் உடம்புக்குத் தெரியவில்லை. எனவே என் உடம்பு தன் உயிரை விட்டுவிடும் போல் இருக்கிறது. என் செய்வேன்!
காமமும் நாணும் உயிர்க்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.
(திருக்குறள் 1163)