வியாழன், 19 பிப்ரவரி, 2009

பஃறி = பற்றி = பத்தி = பக்தி = இறைவனடி


ஆற்றைக் கடக்க உதவும் தெப்பத்தைப் 'பஃறி' என்றனர் (பட்டினப்பாலை -அடி 9). பல வகையான நில வளங்களும் பற்றிக் கிடக்கும் இடத்தைப் 'பஃறிணை' என்றனர் (பொருநராற்றுப்படை -221). தொல்காப்பியர் பத்தைப் 'பஃதென் கிளவி' என்கிறார் (குற்றியலுகரப் புணரியல் -40). பல தீய நோயைப் 'பஃறீநோய்' என்றனர் (புறம் 185-6). 'து' என்னும் சொல் பற்றுக்கோடாக நிற்கும் துணையைக் குறிக்கும் (காண்க. இத்தளம் 'துப்பு' விளக்கம்). பற்றும் துணையாக இருக்கும் தெப்பத்தைப் 'பஃறி' என்ற தமிழர், பற்றுக்கோடாக இருக்கும் இறைவனையும் 'பஃறி' என்று கொண்டனர். (திருவள்ளுவர் இறைவன் அடியைப் 'பஃறி' என்று உருவகம் செய்துள்ளார் (குறள் 10)
இவற்றைத் தமிழ்மொழியின் பாங்கில் எண்ணும்போது பஃறி < பற்றி <பத்தி என்று வளர்ந்துள்ள செந்தமிழ்ச் சொல்லைக் காணமுடிகிறது. 'பத்தனாய்ப் பாடமாட்டேன் பரமனே ... அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே' என்று நாவுக்கரசர் பாடும்போது பக்தனைப் பத்தன் என்று குறிப்பிடுவதைக் காண்கிறோம். இதனை வடமொழியில் 'பக்தி' என்பர். இறைவனைப் பஃறியாகக் கருதுவதும், இறைவன்மீது பற்று வைப்பதும் 'பத்தி' . 'பக்தி' > 'பத்தி' >பற்றி >பஃறி > பற்று > பல் து (பல வகையாகத் துணை நிற்கும் பற்றுக்கோடுகள்). இச்சொல் தமிழிலிருந்து வடமொழிக்குச் சென்றது என்பதற்கு இந்த விளக்கம் போதும்.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Bakthi pattriya thangal aaraaichippaarvai viyakkavaikkiradhu. Melum ariya aarvamaaiullen. Thangal Thamizh panikku mikka nandri.

Muralidharan, Bangalore.

பொதுவன் அடிகள் சொன்னது…

முரளீதரன் கூறியவை - தமிழ் எழுத்துரு - பக்தி பற்றிய தங்கள் ஆராய்ச்சிப் பார்வை வியக்க வைக்கிறது. மேலும் அறிய ஆவலாயுள்ளேன். தங்கள் தமிழ்ப் பணிக்கு மிக்க நன்றி.
---
படிப்பது 'ஞாலத்தின் மாணப் பெரிது'. பாராட்டியது 'வானினும் உயர்ந்தது' - பொதுவன் அடிகள்